Tuesday, 15 September 2015

ஜீவ நாடி ரகசியம்! - குரு பௌர்ணமி! குரு பூர்ணிமா! சிவனே குருவாகி போதனை!

ஆடி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை குரு பௌர்ணமி என்பர்
உங்களுக்கு யாரெல்லாம் குருவாக இருக்கிறார்களோ அவர்களிடம் வஸ்திரம் கொடுத்து ஆசி வாங்கினால் அந்த ஆண்டு முழுதுமே குரு பகவானால் பல நல்ல செயல்கள் நடக்கும் என்கிறது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி. சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற சில யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை,

அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தக்ஷிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.

No comments:

Post a Comment