Thursday, 3 September 2015

ஜோதிடம் -செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்
பொதுவாகவே இன்றைய காலகட்டத்தில், திருமண வயதை எட்டிய (20 வயது முதல் 24 வயது வரை) , திருமண வயதைக் கடந்தும் (24 வயதைக் கடந்தும்) திருமணம் தடைபட்டு, திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண் பெண்களை பெற்றுள்ள பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் திருமணம் சம்மந்தப்பட்ட முக்கியமான சில பிரச்சினைகளுள் முதன்மையானதும், வேதனை தரக்கூடியதாகவும் இருக்கின்ற ஒரு விஷயம், இந்த செவ்வாய் தோஷம் தான்.
பெற்றோர்கள் தம் மக்களுக்கு திருமணம் நிச்சயிக்க முற்படும் போது திருமணப் பொருத்தம் பார்ப்பதற்காக ஜோதிடரை அணுகும் போது மணமகன் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார், மணமகள் வீட்டார் அணுகும் ஜோதிடர் செவ்வாய் தோஷம் பற்றி ஒரு கருத்தை சொல்லுவார். இரு வீட்டாரும் அவரவர் ஜோதிடர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு குழம்பிவிடுகின்றனர்.
செவ்வாய் தோஷத்திற்கு, தென் இந்திய மக்கள்தான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். வட இந்தியாவில் செவ்வாய் தோஷத்திற்கு முக்கியதுவம் தருவதில்லை.
சரி. செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும். இது பொது விதி. சில விதி விலக்குகளும் உண்டு.
பொது விதியிலேயே முரண்பாடுகள் இருக்கின்றன.
இந்த முரண்பாடுகளைப் பற்றி முதலில் பார்த்துவிட்டு, விதிவிலக்குகளைப் பற்றி பிறகு பார்ப்போம்.
லக்கினத்திற்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்க வேண்டும். சந்திரனுக்கோ, சுக்கிரனுக்கோ பார்க்க வேண்டிய தேவையில்லை, லக்கினம் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் ஏற்ப்படும் என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
லக்கினத்திற்குப் பார்ப்பது போல, சந்திரனுக்கும் பார்க்க வேண்டும். சுக்கிரனுக்குப் பார்க்க வேண்டியதில்லை, லக்கினம் அல்லது சந்திரன், இரண்டில் ஏதேனும் ஒன்றிற்கோ அல்லது இரண்டிற்குமா செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் தோஷம் ஏற்படும் என்றும் லக்கினத்திற்கு மட்டும் செவ்வாய் தோஷம் அது முழு தோஷம் என்றும், சந்திரனுக்கு மட்டும் இருந்தால் அது அரைபங்கு தோஷம் என்றும் இரண்டுக்கும் இருந்தால் கடுமையான தோஷம் என்றும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சில ஜோதிடர்கள் லக்கினப்படி உள்ள பரிகார செவ்வாயை சந்திரனுக்கு உள்ள சுத்த செவ்வாயை பொருத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்களால் எழுதப்பட்டு “ தி லிட்டில் பிளவர் கம்பெனி ” பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட “ குடும்ப ஜோதிடம் ” என்ற நூலில் “ லக்கினம், சந்திரன், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய ராசிகளில் இருந்தால், செவ்வாய் தோஷம் எனப்படும் ” என்று பொது விதியையும் கூறி சில விதிவிலக்குகளையும் குறிப்பிடுகிறார்.
ஆனால் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாரல் நடத்தப்பட்ட “ ஜோதிடவியல் பட்டயச் சான்றிதழ் ” படிப்பிற்கான பாடத்திட்டத்தைத் தயாரித்த ஆசிரியப் பெருமக்கள் - பல நூறு ஜாதகங்களை ஆய்வு செய்தவர்கள் – பாடப்புத்தகத்தில் “ செவ்வாய் தோஷம் திருமணத்தைத் தாமதப்படுத்துமே தவிர தோஷத்தைத் தராது. ” என்று வலியுறுத்திக் கூறியுள்ளனர். மேலும், பல நுற்றுக்கணக்கான ஜாதகங்களை ஆராய்ந்து அனுபவம் மிக்க ஜோதிடர் ஸ்ரீமான் ஓ.பி. லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார், அவர்களால் எழுதப்பட்டு ஆனந்தபோதினி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட ஜோதிஷ பாவத்திரைய நிர்ணயம் என்ற நூலில் செவ்வாய் தோஷம் என்று ஒரு தோஷமே இல்லை என்று குறிப்பிடுகிறார்.
இனி விதி விலக்குகளைப் பற்றி பார்ப்போம்.
1) மேற்படி 2, 4, 7, 8, 12 –மிடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடாகிய மேஷம், விருச்சிகம் நீச்ச வீடாகிய கடகம், உச்ச வீடாகிய மகரம் ஆகிய ராசிகளாக இருந்து அங்கே செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
2) 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கும் செவ்வாய், - சூரியன், சனி, குரு ஆகிய இம்மூன்று கிரகங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
3) ஜென்ம லக்கினம் கடகமாகவோ, சிம்மமாகவோ இருந்தால், 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.
4) செவ்வாய் இருக்குமிடம் மிதுனம் அல்லது கன்னியாக இருந்து அது 2 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
5) செவ்வாய் இருக்குமிடம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து அது 4 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
6) செவ்வாய் இருக்குமிடம் கடகம் அல்லது மகரமாக இருந்து அது 7 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
7) செவ்வாய் இருக்குமிடம் தனுசு அல்லது மீனமாக இருந்து அது 8 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
8) செவ்வாய் இருக்குமிடம் ரிஷபம் அல்லது துலாமாக இருந்து அது 12 –ஆம் வீடாக இருந்தால் தோஷம் இல்லை.
9) எந்த லக்கினமானாலும், செவ்வாய் இருக்குமிடம் சிம்மம் அல்லது கும்பமாக இருந்து, அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.
10) 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் செவ்வாய் சந்திரன் அல்லது புதன் அல்லது சந்திரன், புதன் இருவருடன் சேர்ந்திருந்தால் தோஷம் இல்லை.
11) செவ்வாய் நின்ற ராசி அதிபதி லக்கினத்திற்கு கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் இருந்தால் தோஷம் இல்லை.
12) செவ்வாய் 8, 12 – ல் இருந்து செவ்வாய் நின்ற ராசி மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆனால் தோஷம் இல்லை.
13) ராகு, கேது -களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றிருந்தால், தோஷம் இல்லை.
14) செவ்வாய் சிம்மம், கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் இருந்து அது 2, 4, 7, 8, 12 – ஆம் வீடுகளில் எதுவாக இருந்தாலும் தோஷம் இல்லை.
மேற்கண்ட பதினான்கு விதி விலக்குகளையும் தேவகேரளம் என்ற மூல நூலிலிருந்து ஸ்ரீ பொத்தேரி ராமய்யங்கார் மற்றும் ஸ்ரீ கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகிய இரு அனுபவமிக்க ஜோதிடர்கள் தொகுத்து குடும்ப ஜோதிடம் – நூலில் தந்துள்ளனர்.
மேற்படி 14 விதிவிலக்குகளையும் பெரும்பாலான ஜோதிடர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. பொது விதியை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். அதையாவது முழுமையாக பயன் படுத்துகிறார்களா? என்றால் இல்லை. லக்கினத்துக்கு மட்டும்தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும், என்று ஒரு ரகம், லக்கினத்துடன் சந்திரனுக்கும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம், லக்கினம், சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்றுக்கும் பார்க்க வேண்டும் என்று ஒரு ரகம்.
ஒரு சில ஜோதிடர்கள் மேற்படி விதி விலக்குகளை பயன்படுத்துகின்றனர். எப்படி தெரியுமா?
2, 4, 7, 8, 12 – ல் செவ்வாய் இருந்து விதிவிலக்குகளில் ஏதாவது ஒன்றிரண்டின்படி செவ்வாய் தோஷம் இல்லாமலிருந்தாலும், இது பரிகாரச்செவ்வாய் அல்லது கழிக்கும் செவ்வாய், பரிகாரம் செய்து தோஷதைக் கழிக்க வேண்டும் இல்லையென்றால் விபரீதம் ஏற்படும் என்று கூறி பரிகாரம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் பணம் கறந்துவிடுகின்றனர்.
இப்படி முரண்பாடுகளையும், விதிவிலக்குகளையும் கொண்டுள்ள செவ்வாய் தோஷத்தைப் பற்றிய மேலும் சில கருத்துக்களையும் பார்போம்.
மணமக்கள் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றவருக்கு இல்லாவிட்டால் செவ்வாய் தோஷம் இல்லாதவர் மரணம் அடைவார், என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்து சரியானது என்றால், மரணம் எப்பொழுது நிகழும்? என்று கேட்டால் செவ்வாய் திசையில் அல்லது செவ்வாய் புத்தியில் அல்லது செவ்வாய் அந்தரத்தில் மரணம் ஏற்படும் என்று கூறுவார்கள்.
செவ்வாய் திசையில் மரணம் ஏற்படும் என்றால்....
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசை சுமார் 70 – 80 வயதுக்கு மேல்தான் நடைமுறைக்கு வரும். 70 – 80 வயதுக்கு மேல் மரணம் என்பது சாதாரண விஷயம்.
செவ்வாய் புத்தியில் ஏற்படும் என்றால்.....
எந்த திசையில்? பொதுவாக ஒவ்வொரு மனிதனும் திருமணத்திற்குப் பிறகு சராசரியாக 3 அல்லது 4 திசைகளை சந்திக்கின்றனர்.
செவ்வாய் அந்தரத்தில் என்றால்.....
எந்த திசையில்? எந்த புத்தியில்?
யாருடைய ஜாதகப்படி செவ்வாய் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம் மரணத்தை தரும்?
செவ்வாய் தோஷம் உள்ளவர் ஜாதகப்படியா? செவ்வாய் தோஷம் இல்லாதவர் ஜாதகப்படியா?
இப்படி கேள்வி கேட்டால், இவன் விதண்டாவாதம் செய்கிறான், இவனுக்கென்ன தெரியும்? நான் என் அணுபவத்தில் எத்தனை ஜாதகங்களை பார்த்திருப்பேன்? என்னைவிட அவன் பெரிய இவனா? என்று ஏளனம் செய்வார்கள்.
இப்படி சொல்லும் பல ஜோதிடர்களிடம் கணவன் மணைவி இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்து இருவரில் ஒருவர் மரணம் அடைந்து மற்றவர் உயிருடன் இருக்கும் ஒரே ஒரு ஜோடி ஜாதகத்தை ஆதாரமாகத் தாருங்கள் என்று நான் பலமுறை கேட்டிருக்கிறேன்.யாரும் தரவில்லை.
ஆனால் என்னிடம் இருவரில் ஒருவருக்கு செவ்வாய்
தோஷம் இருந்து மற்றவருக்கு இல்லாமல் இருந்து இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜாதகங்களும், இருவருக்கும் செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்து, திருமணத்திற்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றவர்கள் ஜாதகங்களும் உள்ளன.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தை நிர்ணயிப்பதற்கு முன், கீழ்கண்ட விஷயங்களை கவனிக்க வேண்டும்.
1) அந்தந்த ஜாதகப்படி ஆதிபத்தியத்தின் அடிப்படையில் செவ்வாய் சுபரா? பாவியா?
2) அந்தந்த ஜாதகப்படி செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதி யார்? செவ்வாய் நின்ற ராசி அதிபதி, நட்சத்திர அதிபதியின் நிலை சாதகமானதா? பாதகமனதா?
3) மணமக்கள் இருவருக்கும், தோஷம் இருகிறது, அல்லது தோஷம் இல்லாமல் சுத்த ஜாதகமாக இருக்கிறது, என்ற நிலையில் திருமணத்திற்குப் பிறகு நன்மை இல்லாவிட்டாலும் எந்த தீய நிகழ்வுகளும் ஏற்படாது? என்பதற்கு எதுவும் உத்திரவாதம் உண்டா?
4) சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய எட்டு கிரகங்களும் தோஷத்தைத் தராதா?
5) 2, 4. 7, 8, 12 ஆகிய இடங்களைத் தவிர 1, 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் உள்ள செவ்வாய் தோஷத்தை செய்யாதா?
6) முன்னதாகக் கூறப்பட்ட 14 விதிவிலக்குகளையும் அனுசரிப்பதா? வேண்டாமா?
7) ஒரு குறிப்பிட்ட ஜாதகத்தில் மூலநூல்களில் கூறப்பட்டுள்ள ராஜயோக கிரக அமைப்பு இருந்த போதும் நடைமுறையில் அனுபவத்தில் ஒத்துப்போகவில்லை, ஏன் என்று கேட்டால் பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்து “ சில சிறப்பு விதிகளின்படி யோகம பங்கம் ஏற்பட்டுவிட்டது ”, என்று கூறுகிறார்கள். அதுபோல இந்த செவ்வாய் தோஷத்திற்கு தோஷ பங்க நிலை ஏற்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டுமா? கூடாதா?
8) லக்கினத்திற்கு மட்டும் தான் செவ்வாய் தோஷம் பார்க்கவேண்டும் என்று கூறுபவர்களுக்கு – களத்திரக்காரகன் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா? உடல் காரகன் மற்றும் மனோகாரகன் சந்திரனுக்கு செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லையா?

No comments:

Post a Comment